

சென்னை,
சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்கள், சாலைகளில் சுற்றித் திரிந்த 1,823 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.52.75 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மாடுகள் பிடிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 1.1.2026 முதல் 11.11.2026 வரை மொத்தம் 1,823 எண்ணிக்கையிலான மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.52.72 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2024-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சுமார் 22,875 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறு தெருக்களில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு, மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பாண்டில் 11.11.2026 வரை மொத்தம் 1,823 எண்ணிக்கையிலான சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.52 லட்சத்து 72 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
மண்டலம்-1-ல் 47, மண்டலம்-2-ல் 107, மண்டலம்-3-ல் 155, மண்டலம்-4-ல் 29, மண்டலம்-5-ல் 114, மண்டலம்-6-ல் 84, மண்டலம்-7-ல் 218, மண்டலம்-8-ல் 148, மண்டலம்-9-ல் 170, மண்டலம்-10-ல் 135, மண்டலம்-11-ல் 93, மண்டலம்-12-ல் 105, மண்டலம்-13-ல் 176, மண்டலம்-14-ல் 110, மண்டலம்-15-ல் 132 என மொத்தம் 1,823 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாட்டின் உரிமையாளர்கள் தங்களின் மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விடாமலும் அபராதத்தைத் தவிர்த்திடும் வகையிலும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி பராமரித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.