கடந்த ஆண்டில் தெற்கு ரெயில்வேயில் 183 கி.மீ. இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்தன

தெற்கு ரெயில்வேயில் கடந்த ஆண்டில் மட்டும் 183 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழிப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளதாக பொது மேலாளர் பி.ஜி.மல்யா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் தெற்கு ரெயில்வேயில் 183 கி.மீ. இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்தன
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே சார்பில் நேற்று 73-வது குடியரசு தின விழா பெரம்பூர் ரெயில்வே மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) பி.ஜி.மல்யா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். அதன்பிறகு முதன்மை தலைமை பாதுகாப்புப்படை கமிஷனர் பிரேந்திர குமார் தலைமையில் ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களின் அணி வகுப்பு நடந்தது.

விழாவில் தெற்கு ரெயில்வேயின் பல்வேறு துறைகளை சேர்ந்த முதன்மை துறை தலைவர்கள், அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தெற்கு ரெயில்வே பெண்கள் நல அமைப்பு துணை தலைவர் ரேணுகா ஜி.மல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பொது மேலாளர் பி.ஜி.மல்யா பேசியதாவது:-

அகலபாதை பணிகள்

கொரோனா பேரிடரில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தெற்கு ரெயில்வே படிப்படியாக மீண்டு வருகிறது. தெற்கு ரெயில்வேயில் 93 சதவீத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயங்க தொடங்கி விட்டன. அதேபோல், 306 பயணிகள் ரெயில்களில் 121 ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு விட்டன. அதே நேரத்தில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் 21.75 மில்லியன் சரக்குகளை கையாண்டு ரூ.1,990 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. மேலும், தெற்கு ரெயில்வேயின் முக்கிய திட்டங்களான தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தடம், மதுரை-தேனி இடையே அகலப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

183 கி.மீ. தொலைவு

மேலும், தெற்கு ரெயில்வேயில் கடந்த ஆண்டு மட்டும் 183 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழித்தடம் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்தியன் ரெயில்வே 2023-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்மயமாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்தவகையில் பொள்ளாச்சி-போத்தனூர், மதுரை-மானா மதுரை உள்பட தெற்கு ரெயில்வேயில் 352 கி.மீ. வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 112 கி.மீ. வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணிகள் விரைவில் முடிவடையும்.

ரெயில்கள் செயல்பாடுகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த 19 நவீன கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல், 130 ஏ.சி. பெட்டிகள், 60 சமையல் கூடம் பெட்டிகள், 126 பவர் கார் பெட்டிகளில் தீ விபத்து கண்டறியும் நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பெண் பயணிகள் பாதுகாப்புக்காக மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மகத்தான சாதனை

நடப்பு நிதி ஆண்டில் தெற்கு ரெயில்வே சோலார் ஆலைகள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் மகத்தான சாதனைகளை புரிந்துள்ளது. அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலம் பகல் நேர மின்சார தேவை 100 சதவீதத்தையும் பூர்த்தி செய்யும் முதல் ரெயில் நிலையமாக விளங்குகிறது.

அதேபோல், 3 எந்திர தொழிற்சாலைகள் கிரீன்கோ சான்றிதழ்களையும், பொன்மலை தொழிற்சாலை கிரீன்கோ சான்றிதழில் பிளாட்டினம் வகையும் பெற்று சாதனை படைத்துள்ளது. தெற்கு ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் 75 சதவீதம் பேர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com