

திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவுறுத்தலின்படி, போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகரத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று (9.2.2026) வரை திருநெல்வேலி மாநகரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருளான கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 18.335 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருநெல்வேலி மாநகரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1,521 மதுபான பாட்டில்கள் (262 லிட்டர்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரில் 2026ம் ஆண்டு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்திய 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலி மாநகர காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.