சென்னையில் இதுவரை 1.86 லட்சம் மரக்கன்றுகள் நடவு! - மாநகராட்சி தகவல்

சென்னையில் மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் இதுவரை 1.86 லட்சம் மரக்கன்றுகள் நடவு! - மாநகராட்சி தகவல்
Published on: 

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் இதுநாள்வரை 1,86,235 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மரக்கன்றுகள் நடும்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செடிகள் நடும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திட உத்தரவிட்டு, அதன்படி மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 993 பூங்காக்கள், 417 சென்னை பள்ளிகள், திறந்தவெளி நிலங்கள், மயானபூமிகள், விளையாட்டுத் திடல்கள், குளங்கள், ஏரிகள், பாலவாக்கம் கடற்கரை, மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடங்கள், சாலைகளில் போக்குவரத்து மையப் பகுதிகள், சாலைகளில் உள்ள போக்குவரத்து தீவுப் பகுதி, மக்கள் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள், செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை 1,86,235 மரக்கன்றுகள் நடவு

இதன் ஒரு பகுதியாக, இன்று (24.11.2026) தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-125க்குட்பட்ட காமராஜர் சாலையின் சாலை மையத்தடுப்பில் செடிகள், மாதவரம் மண்டலம், வார்டு-32க்குட்பட்ட தாமரைக் குளம் பகுதி, இராயபுரம் மண்டலம், வார்டு-53க்குட்பட்ட மூலக்கொத்தளம் மயானபூமி, அண்ணாநகர் மண்டலம், சாந்தி காலனி சாலை, 2ஆவது அவென்யூ பகுதி உள்ளிட்டப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை 1,86,235 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏதுவாக, மயிலாப்பூர், மாடம்பாக்கம், மைலேடீஸ் பூங்கா ஆகிய இடங்களில் நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு செடிகள் நடவு செய்து வளர்க்கும் பணிகளும், வனத்துறை, தனியார் பண்ணைகளிலிருந்தும் மரக்கன்றுகள் பெற்று நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தன்னார்வலர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தங்களது பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கும் ஊக்குவிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X