தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: வேளாங்கண்ணியில் மவுன ஊர்வலம்

தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: வேளாங்கண்ணியில் மவுன ஊர்வலம்
Published on

சென்னை,

18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.

இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் மாண்டு போனார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை. என்றாலும், 18 ஆண்டுகளாக இன்றும் கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்துவார்கள். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஆறுதலையும் தெரிவிப்பார்கள்.

இந்நிலையில், சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வர்த்தகர் சங்கம் மற்றும் பேராலயம் சார்பாக பேரணி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com