

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் பைக் திருட்டு வழக்குகளில் இதுவரை 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 19 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்கும் பொருட்டு, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. வழிகாட்டுதலின்படி, நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ் கண்ணன் மேற்பார்வையில், நாங்குநேரி உட்கோட்ட போலீசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே பைக் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நாங்குநேரியைச் சேர்ந்த நல்லகண்ணு (வயது 28) மற்றும் சிறார் ஒருவர் கடந்த 19.9.2026 அன்று கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 9 திருடப்பட்ட பைக்குகள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், மூன்றடைப்பு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய மறுகால்குறிச்சியைச் சேர்ந்த கொம்பையா(42) என்பவரை நேற்று (2.10.2026) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்து திருடப்பட்ட மேலும் 10 பைக்குகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பைக்குகள் தொடர்பாக தச்சநல்லூர், பாளையங்கோட்டை, களக்காடு, பெருமாள்புரம், வள்ளியூர், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி டவுன் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தொடர் நடவடிக்கையால், இதுவரை மொத்தம் 19 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.