

தென்காசி,
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே முருகன் கோவிலுடன் நெருங் கிய தொடர்பு கொண்ட 19-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. விவசாயி. இவரது தோட்டத்தில் சிற்பங்களுடன் கூடிய கல் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தென்பொதிகை ஆவணக்காப்பகத்திற்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் கோபால்குமார், ராஜசேகர், பாலகங்காதரன், மாரியப்பன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தற்போது 'குருவிமேடு' என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
புதருக்குள் இருந்த கல்வெட்டு 70×45 செ.மீ. அளவுகளுடன் சிற்பங்களுடன் கூடிய கலைநயத்துடன் இருந்தது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:-
இலஞ்சி பகுதியில் கிடைத்த கல்லில் 12 வரிகளுடன் கூடிய முற்றுப்பெறாத கல்வெட்டு உள்ளது. அதன் அடியில் ஒரு வேலும், பாம்பை கவ்விய மயிலும் புடைப்பு சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த எழுத்துக்களுடன் கூடிய இந்த கல்வெட்டின் சில பகுதிகள் முற்றிலும் சிதைந்துள்ளன. தமிழ் துன்மதி ஆண்டு ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையான ஆங்கிலத்தேதி 04.09.1801 .
அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள 19-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டு, இலஞ்சி முருகன் கோவிலுடன் நெருங்கிய தொடர்பு டையதாக இருக்கலாம். தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.