

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரைக்குளம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள அசோக்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில், கடந்த 4.9.2026 அன்று அதிகாலை மகேந்திரன் (வயது 32) என்பவர் காரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய நபர் கத்தியை காட்டி மிரட்டி, மகேந்திரனை கையால் தாக்கி, அவரிடமிருந்த 5 சவரன் தங்க செயின் மற்றும் ரூ.500 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்த குற்றத்தில் தொடர்புடைய தென்காசி குத்துக்கல்வலசை பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(22) மற்றும் தென்காசி களக்குடி தெருவைச் சேர்ந்த அரவிந்த்(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து 24 கிராம் (3 சவரன்) தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்து, திருடப்பட்ட சொத்துக்களை மீட்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.