

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி கிராமத்தில், சிவன்பாண்டி (வயது 45)என்பவர் மதுபானங்களை கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சிவன்பாண்டி மற்றும் அவரது மகன் சார்லஸ் நவீன்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் சட்டவிரோத மதுபான விற்பனைக்காக பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. களக்காடு காவல் நிலையத்தில் மேற்படி குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளியான சிவன்பாண்டியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சட்டப்படி அவருக்கு பிணை வழங்கப்பட்டு, அவரது உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சிவன்பாண்டி மீண்டும் களக்காடு காவல் நிலையத்திற்கு வந்து, காவல் நிலையம் முன்பு நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் பொதுத் தொல்லை ஏற்படுத்தினார். தொடர்ந்து, தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினார். உடனடியாக அவருடன் வந்திருந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
களக்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் மேற்கொண்ட சட்டபூர்வ நடவடிக்கையை திசைதிருப்பும் நோக்கில், சிவன்பாண்டி காவல் நிலையத்திற்கு வந்து பிரச்சினையில் ஈடுபட்டதுடன், பணியில் இருந்த அரசு அதிகாரிகளையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும், காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.