

நெல்லை,
நெல்லையை அடுத்த சங்கன்திரடு பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டியன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 2 பேர் குடிப்பதற்கு தண்ணீர் கப் கேட்டனர் அதற்கு சிவன்பாண்டியன் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து சிவன்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறுநாள் காலையில் சிவன்பாண்டியன் கடையை திறந்தபோது கடையில் உள்ள பொருட்கள் உடைத்து சூறையாடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அதில் சிவன்பாண்டியனிடம் தகராறு செய்த தெற்கு சங்கன்திரடை சேர்ந்த முப்புடாதி மகன் மாரியப்பன் (வயது 20), மற்றொரு மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி(19) ஆகியோர் டீக்கடை, கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.