உரக்கடையில் ரூ.35.98 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது: பணம் பறிமுதல்

கோவில்பட்டி பகுதியில் உரக்கடையின் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.35.98 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
பணம் பறிமுதல், 2 பேர் கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.35.98 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.35.98 லட்சம் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை தீத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 34). இவர் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் திட்டங்குளம் செல்லும் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி நள்ளிரவு இவரது கடையின் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.35.98 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளின் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(66) மற்றும் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலு(எ) பாலசுப்பிரமணியன்(49) ஆகிய 2 பேரும் மேற்கூரையை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது உறுதியானது.

இவர்களைப் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்ததில், அவர்கள் உரக்கடையில் கொள்ளையடித்த ராஜேந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.

2 பேர் கைது; பணம் பறிமுதல்

உடனடியாக அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35.98 லட்சம் ரொக்கப்பணத்தை முழுமையாக பறிமுதல் செய்தனர்.

32 திருட்டு வழக்குகள்

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 32 திருட்டு வழக்குகளும், பாலசுப்பிரமணியன் மீது விருதுநகர் மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

X