

சேலம்,
சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் கண்ணகி (வயது 45). இவர், அஸ்தம்பட்டியில் தனியார் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளை மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் ஆதார் நகலை வாங்கிக்கொண்டு அவர்களது பெயரில் வங்கியில் கறவை மாடு கடன் பெற்று ரூ.70 கோடிக்கு மேல் மோசடி செய்தார்.
இந்த மோசடி குறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அறக்கட்டளை நிர்வாகி கண்ணகி, அவரது கூட்டாளி முத்துக்குமரன், கன்னங்குறிச்சி மோனிஷா (28), ஓமலூர் அஜித்குமார், திருமலைகிரி வேடுகத்தாம்பட்டி அரவிந்த் (23), புதுக் கோட்டை சுகுமாறன் (30), பெருமாம்பட்டி மணிகண்டன், வேடுகத்தாம்பட்டி பூபாலன் (33) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த மோசடி புகார் வழக்கில் மல்லூரை சேர்ந்த மனோஜ்குமார் (33), கண்ணகியின் கணவர் குமரன் (56) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனால் இந்த மோசடியில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.