

பூந்தமல்லி,
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினர். இதனால் இருவரையும் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் போரூரைச் சேர்ந்த வசந்த்குமார்(வயது 28), திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார்(25) ஆகியோர் என்று தெரியவந்தது. இருவரும் பழைய குற்றவாளிகள் என்பதும், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.
அவர்களது செல்போனை சோதனை செய்தபோது யானை தந்தம் படம் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது யானை தந்தம் விற்பனைக்கு உள்ளதாக பிரவீன் என்பவர் வாட்ஸ் அப்பில் படம் அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து எண்ணூரை சேர்ந்த பிரவீன்(27), எர்ணாவூரை சேர்ந்த செல்வராஜ்(57) ஆகிய 2 பேரை கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் ஒவ்வொன்றும் 1 அடி நீளமும், தலா 1 கிலோ எடையையும் கொண்டிருந்தன. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.
யானை தந்தங்கள் திருவள்ளூர் வனச்சரக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சர்வதேச அளவிலான யானைத் தந்தம் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர்.