கல்குவாரியில் பாறைகள் விழுந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது


கல்குவாரியில் பாறைகள் விழுந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2025 11:45 AM IST (Updated: 23 May 2025 1:01 PM IST)
t-max-icont-min-icon

கல்குவாரியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியில் கடந்த 20-ந் தேதி, ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அதில் முருகானந்தம் (வயது 47), ஆறுமுகம்(52), மைக்கேல் (47) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம், ஆறுமுகம் இறந்தனர். மைக்கேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நடந்த மீட்புப்பணியின்போது ஆண்டிசாமி, கணேசன், பொக்லைன் டிரைவர் ஹர்ஷித் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். இதில் ஹர்ஷித்தின் உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து படுகாயத்துடன், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கல்குவாரியில் பாறைகள் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி இறந்த மைக்கேல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த நிலையில், கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாரியின் உரிமையாளர் மேகவர்ணனின் தம்பி கமலதாசன், மேற்பார்வையாளர் கலையரசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story