தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பணம் ராதாகிருஷ்ணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.
கைது
Published on: 

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி செய்ததாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் பெண் ஒரு வரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி

திருவொற்றியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பகுதி மேலாளரான அரவிந்த் என்பவர், திருவொற்றியூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

காயத்ரி (வயது 24) என்ற பெண், குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 411 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும். அவற்றை மீட்டு தங்கள் நிறுவனத்தில் அடகு வைக்குமாறும் கூறினார். இதனை நம்பிய அப்போதைய கிளை மேலாளர் பிரவீன்குமார் (25), அடகு ரசீது மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, நிறுவனத்தின் அனுமதியுடன் ரூ.44.67 லட்சத்தை காயத்ரி தெரிவித்த தனியார் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஆனால், காயத்ரி தங்க நகைகளை ஒப்படைக்காமல் தலைமறைவானார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன்குமாரும் காயத்ரியும் கூட்டுச்சேர்ந்து பணத்தை அனுப்பியதும், பின்னர் அந்தப் பணம் ராதாகிருஷ்ணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட காயத்ரி, பிரவீன்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். காயத்ரி மீது ஏற்கனவே வண்ணாரப்பேட்டை போலீசில் மோசடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள ராதாகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com