

சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் கடந்த 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கம் நிறைவடைந்ததையொட்டி, அது தொடர்பாக, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களின் பெரும் ஆர்வத்துடனும் தன்னிச்சையான பங்கேற்புடனும் கையெழுத்து இயக்கம் களிப்புறத்தக்க வெற்றி பெற்றிருப்பதை, நம்மைவிட நமது அரசியல் எதிரிகள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். பன்மைத் தன்மையும், மதச்சார்பின்மையும் ஊறிப்போன இந்தியாவைப் பாதுகாக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஆபத்துகளை மக்களிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனும் முழு மனதுடனும் கையெழுத்துப் பெற வேண்டும் என்பதை தி.மு.க. நிர்வாகிகளுக்கு விளக்கி, அதுதொடர்பாக அந்தந்த மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கூட்டணிக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, பிப்ரவரி 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
மதவாத பா.ஜ.க.வின் தேச விரோத செயல்பாட்டையும், ஈழத்தமிழர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் பச்சைத்துரோகம் செய்த அ.தி.மு.க அரசையும் ஒவ்வொரு கையெழுத்திலும் மக்களே அம்பலப்படுத்துவதைக் காணமுடிந்தது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் அதன் தொடர் நடவடிக்கைகளாலும் முதல்-அமைச்சர் பதவியில் எப்படியாவது நீடிக்க வேண்டும் என்பதற்காக எதையும் அடமானம் வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆபத்து வரும்நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்க கூடியவர்களுக்கும் கூட அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து அனைவரையும் பாதுகாக்கத்தான் இந்தக் கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். 2 கோடியைத் தாண்டியுள்ள கையெழுத்துகளை ஜனாதிபதியிடம் அளிக்க இருக்கிறோம். அதன்பிறகும், மத்திய அரசு இதுபற்றிப் பரிசீலிக்கத் தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.
பிப்ரவரி 14-ந்தேதி கூடுகின்ற தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி, அ.தி.மு.க. அரசு தனது பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக்கூடாது. பா.ஜ.க. அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அ.தி.மு.க. அரசு இதனை செயல்படுத்த நினைத்தால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை இப்போதே எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.
கூட்டணி கட்சித் தலைவர்களும், தி.மு.க. நிர்வாகிகளும், கட்சியின் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களும் அயராமல் உழைத்திட்ட காரணத்தால்தான், கையெழுத்து இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி, புதிய வரலாற்றைப் படைத்திடும் வண்ணம் 2 கோடிக்கும் அதிகமான கையொப்பங்கள் பதிவாகியுள்ளன. மனமுவந்து முன்வந்து கையெழுத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் களமாக இருந்தாலும், கையெழுத்து இயக்கமாக இருந்தாலும், தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு அளித்துவரும் பேராதரவு கண்டு, மத்திய - மாநில ஆட்சியாளர்கள் நடுங்குகின்ற காரணத்தால் தான், இதனைத் தடைசெய்ய வேண்டும் என்றும், கட்டாயக் கையெழுத்து என்றும், தங்கள் நிலையைவிட்டு பலபடிகள் கீழே இறங்கி விமர்சனம் செய்கிறார்கள்.
மக்களுக்கு எதிரான நாட்டை மத ரீதியாகத் துண்டாடும் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து தி.மு.க.வின் போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன் மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.