சென்னை, புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக காற்றுடன் மழை; சாலையோரங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது

சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையோரங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சென்னை, புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக காற்றுடன் மழை; சாலையோரங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
Published on

சென்னையில் மழை

தமிழகத்தில் டவ்தே புயல் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.கடந்த 2 நாட்களாக வெப்பசலனத்தால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்கிறது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திடீரென்று மழை பெய்தது.

தண்ணீர் தேங்கியது

அதன் தொடர்ச்சியாக நேற்றும் 2-வது நாளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் மழை பெய்யத்தொடங்கியது. சென்னை எழும்பூர், தியாகராயநகர், கிண்டி, கோயம்பேடு, வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, வளசரவாக்கம் உள்பட சில இடங்களில் மழை பெய்தது. ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதேபோல், புறநகரை பொறுத்தவரையில் போரூர், பூந்தமல்லி, மணப்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், திருவேற்காடு, மதுரவாயல் உள்பட சில பகுதிகளிலும் மழை பெய்தது. சில நிமிடங்களே மழை பெய்தாலும், பெரும்பாலான சாலையோரங்கள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது.

இதமான சூழல்

சென்னையில் கோடை வெயில் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வதைத்தது. சுட்டெரித்து வந்த வெயிலுக்கு மத்தியில் இந்த திடீர் மழையால் சென்னையில் இதமான சூழல் நிலவியது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று மழை பெய்த நிலையில், இன்றும் (சனிக்கிழமை) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com