2 அணைக்கட்டுகள் கட்டாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தளவானூர், எல்லீஸ்சத்திரத்தில் அணைக்கட்டுகள் கட்டாததால் வீணாக கடலில் தண்ணீர் கலப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 அணைக்கட்டுகள் கட்டாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்
Published on

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணை ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளில் இருந்து உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம், தளவானூர் ஆகிய தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உடைந்த அணைக்கட்டு

ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் ஆற்றுப்பகுதிகளில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், குளிப்பதை தடுக்கும் வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தளவானூர் அணைக்கட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி உடைந்து சேதமடைந்ததோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அணைக்கட்டு உடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் புதிய அணைக்கட்டை கட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

வீணாக கடலில் கலக்கிறது

இதனால் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும், தளவானூர் தென்பெண்ணையாற்றுக்கு வரும் தண்ணீர் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. ஏற்கனவே எல்லீஸ்சத்திரத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்த நிலையில் அங்கு புதிய அணைக்கட்டு கட்டப்படவில்லை. அதுபோல் தளவானூரிலும் புதிய அணைக்கட்டு கட்டப்படாததால் தென்பெண்ணையாற்றில் ஓடும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைக்க முடியாமல் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இதனை பார்க்கையில் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தளவானூர் அணைக்கட்டு உடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதுபோல் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இங்கு புதிய அணைக்கட்டுகள் கட்டக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியபோதிலும் இதுநாள் வரையிலும் தளவானூர், எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றில் புதிய அணைக்கட்டு கட்டப்படவில்லை. இதனால் பருவமழை காலங்களில் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் அப்படியே வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆண்டும் அதே நிலைமைதான் நீடிக்கிறது. இதனால் வரும் கோடை காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படலாம்.

விரைந்து கட்டப்படுமா?

எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு, சமீபத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தளவானூரில் அணைக்கட்டு கட்டுவது பற்றி இதுவரையிலும் அரசாணை வெளியிடப்படவில்லை. ஆகவே அடுத்த ஆண்டுக்குள் தளவானூர், எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டுகளை அரசு விரைந்து கட்டி முடித்து தண்ணீரை சேமித்து வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com