பெண்ணிடம் நகை பறித்த 2 என்ஜினீயர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்


பெண்ணிடம் நகை பறித்த 2 என்ஜினீயர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
x

கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர்கள் அந்த பெண்ணிடம் நகை பறித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர் கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 52). இவர்கள் பூ மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனிடையே ஜெயலட்சுமி நேற்று கணவர் ராஜாவுடன், புதுச்சத்திரம் அருகே உள்ள செம்மாம்பட்டியில் இருக்கும் குலதெய்வ கோவிலான வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கு வழிபாடு நடத்திவிட்டு, மாலையில் அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக தம்பதியினர் மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனிடையே பாச்சல் பிரிவு அருகே சென்றபோது சிறுநீர் கழிப்பதற்காக ராஜா மொபட்டை நிறுத்தியுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், தம்பதியிடம் கொல்லிமலைக்கு வழி கேட்டதாக தெரிகிறது. பின்னர் திடீரென ஜெயலட்சுமி அணிந்திருந்த 4½ பவுன் தாலி, 3 பவுன் சங்கிலியை வண்டியில் இருந்த வாலிபர் ஒருவர் பறித்துள்ளார். இதில் ஜெயலட்சுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

மேலும் நகையுடன் வாலிபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாலிபர்களை பிடிக்க துரத்தினர்.

அப்போது எதிரே வந்த சுற்றுலா வேன், வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 2 வாலிபர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ராசிபுரம் போலீசாரிடம், பிடிபட்ட வாலிபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் வாலிபர்களிடம் இருந்த 7½ பவுன் நகையை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த மாணிக்கம் மகன் பைந்தமிழன் (24), தீர்த்தகிரி மகன் தங்கராஜ் (25) என்பது தெரியவந்தது.

மேலும் பைந்தமிழன் சிவில் என்ஜினீயர் என்பதும், தங்கராஜ் மெக்கானிக்கல் என்ஜினீயர் என்பதும் தெரிய வந்தது. கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய நகை பறிப்பில் அவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர்கள் பைந்தமிழன், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

1 More update

Next Story