விதிமீறிய 2 உர கடைகளுக்கு 'சீல்'

நீலகிரியில் விதிமீறிய 2 உர விற்பனை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
விதிமீறிய 2 உர கடைகளுக்கு 'சீல்'
Published on

நீலகிரியில் விதிமீறிய 2 உர விற்பனை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

குழுவினர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயத்திற்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவட்ட முழுவதும் 300-க்கும் மேற்பட்ட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகள் உள்ளன.

இந்தநிலையில் நீலகிரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக் கட்டுப்பாடு) லாவண்யா ஜெயசுதா தலைமையில் வேளாண்மை அலுவலர் அமிர்தலிங்கம், உர கட்டுப்பாடு ஆய்வக வேளாண் அலுவலர்கள் மணிகண்டன், காயத்ரி, மண் பரிசோதனை ஆய்வக வேளாண் அலுவலர் சாய்நாத் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் 5 நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள உர விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர்.

2 கடைகளுக்கு 'சீல்'

அங்கு உரங்கள் இருப்பு விவரம் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டு உள்ளதா, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதற்கான உரிமம் இருக்கிறதா, உரத்தின் விலை தகவல் பலகைகள் குறிப்பிடப்பட்டு உள்ளதா, விற்பனை மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் விதிகளை மீறிய 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கடைகளில் உர இருப்பு விவரங்களை முறையாக பராமரிக்காத 7 கடைகள் மற்றும் உர உரிமத்துடன் தங்களுக்கு உரம் வினியோகம் செய்யும் நிறுவனங்களில் பெறப்பட்ட ஓ படிவங்களை இணைக்காத 4 கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் திடீர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், விதிகளை மீறினாலோ அல்லது உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com