லாரி மீது கார் மோதலில் 2 பேர் பலி; கனவு நனவான 10 நாளில் ஆசிரியை பலியான சோகம்

சென்னையில் நடந்த பயிற்சி தொடக்க விழாவிற்கு வந்தபோது விபத்தில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியை உள்பட 2 பேர் பலியாகினர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
அவ்வாறு பணியாற்றி வரும் 2,715 ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆசிரியைகளான விழுப்புரம் தனலட்சுமி கார்டன் மூவேந்தர் நகரை சேர்ந்த ஜெகதீசன் மனைவி சிவரஞ்சனி (வயது 38), திருச்சி பாலகரை மல்லிகைபுரத்தை சேர்ந்த நெகர்நிஷா (47), கடலூர் மாவட்டம் நல்லாத்தூரை சேர்ந்த கவுசல்யா (23), கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் பகுதியை சேர்ந்த பூவிழி (35) ஆகியோர் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரில் ஒன்றாக செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி தோழிகளான அவர்கள் 4 பேரும் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து வாடகை கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களுடன் நெகர்நிஷாவின் கணவர் ஷாகுல் அமீது (52), கவுசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் வந்தனர். காரை கடலூர் மாவட்டம் பண்டசோழநல்லூரை சேர்ந்த சூர்யா (27) என்பவர் ஓட்டினார்.
அய்யூர்அகரம் என்ற இடத்தில் அதிகாலை 5 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு மேம்பால பணிகள் நடந்து வருவதால் டிரைவர் சூர்யா, காரை எதிர்திசையில் இயக்கி மாற்று வழியில் (ராங்ரூட்) சென்றார். அந்த சமயத்தில் எதிரே சென்னையில் இருந்து திருச்சிக்கு சிமெண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது நேருக்கு நேராக கார் மோதியது.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஷாகுல்அமீது, ஆசிரியை சிவரஞ்சனி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நெகர்நிஷா, கவுசல்யா, பூவிழி, எல்லப்பன், முருகன் மற்றும் கார் டிரைவர் சூர்யா ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் நேரடி நியமனம் மூலம் தனது ஆசிரியர் கனவு நனவான 10 நாளில் சிவரஞ்சனி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.






