தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்

தமிழக சட்டசபையில் நேற்று 110–வது விதியின் கீழ் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு ஒரு புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக்கொள்கை உருவாக்க உள்ளது.

வீடு கட்டும் செலவினத்தை குறைத்தல், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை உள்ளடக்கிய அனைவருக்கும் போதுமான வீட்டு வசதியினை கிடைக்க செய்தல்; வாங்கத்தக்க விலையில் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்தல்; அனைவருக்கும் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய வீடு வழங்குதலை உறுதி செய்தல் போன்றவை இக்கொள்கையின் சிறப்பம்சங்களாகும்.

பிரதமரின் வீட்டுவசதி திட்ட நிதி, சிறப்பு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் மூலம் திரட்டப்படும் நிதி, பயனாளிகளின் பங்களிப்புத் தொகை மற்றும் தமிழக அரசால் அளிக்கப்படும் பற்றாக்குறை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி, குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், எர்ணாவூரில் 676 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6,874 வீடுகள் கட்டித்தரப்படும்.

இந்த திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 5 ஆயிரத்து 589 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் 1,86,308 தனி வீடுகள் கட்டப்படும்.

மேலும், நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் வகைப்பாட்டின் கீழ் ஒரு குடியிருப்பு 10 லட்சம் ரூபாய் வீதம் 14,828 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,482 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். மேற்கண்ட இரண்டு வகைபாட்டின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மாநில அரசின் மானியமாக 2,007 கோடியே 53 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com