முயல் பிடிக்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி சாவு

பன்றி வேட்டைக்காக அமைத்த மின்கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் முயல் பிடிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
முயல் பிடிக்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி சாவு
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் இடையபட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவருடைய மகன் கருப்பசாமி (வயது 21), அலப்பலசேரியை சேர்ந்த சிவராமன் என்பவருடைய மகன் ஸ்ரீஅனுமந்தன் (17), மணி என்பவருடைய மகன் மனோஜ்(23).

இவர்கள் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் இரவு முயல் பிடிக்க இடையப்பட்டி கண்மாய்க்கு சென்றுள்ளனர். தாங்கள் கொண்டு சென்ற நாயுடன் கண்மாயில் இறங்கி உள்ளனர். ஆனால் கண்மாயில் பன்றி வேட்டைக்காக கட்டுக்கம்பி கட்டி அதில் மின் இணைப்பு கொடுத்து போட்டிருந்தனர்.

அந்த மின்கம்பியை முன்னால் சென்ற கருப்பசாமி, லேசாக மிதித்து விட்டார். உடனே அவர் உஷாராகி தப்பித்து விட்டார். ஆனால் அவருடன் சென்ற ஸ்ரீஅனுமந்தன் அதே கம்பியை மிதித்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அவரை காப்பாற்ற மனோஜ் மற்றும் கருப்பசாமி முயன்றனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

உடனே இவர்களுடன் வந்த மற்ற 3 பேரும் ஓடிச்சென்று ஊரில் இருந்தவர்களை அழைத்து வந்து மின்சாரத்தை நிறுத்தினர்.

2 பேர் பலி

மேலும் மின்சாரம் தாக்கிய கருப்பசாமி, ஸ்ரீஅனுமந்தன், மனோஜ் ஆகியோரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே கருப்பசாமி, ஸ்ரீஅனுமந்தன் ஆகியோர் இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். மனோஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

கண்மாய்க்குள் மின் வேலி அமைத்த வன்னிவேலம்பட்டியை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர்

மின்சாரம் தாக்கி இறந்த ஸ்ரீஅனுமந்தன் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com