தூத்துக்குடியில் போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த டிரைவரை சுந்தர்நகரை சேர்ந்த வாலிபர், எம்.சண்முகபுரம் விலக்கு அருகே வழிமறித்து பாட்டிலை உடைத்து கழுத்தை நோக்கி குத்த முயன்றுள்ளார்.
தூத்துக்குடியில் போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி முத்தையாபுரம், சாமிநகரை சேர்ந்த சுந்தரவேல் (வயது 25), டிரைவர் ஆவார். இவர் முத்தையாபுரத்தில் நின்றபோது முன்விரோதம் காரணமாக சுந்தர்நகரை சேர்ந்த சின்னப்பராஜ்(19) என்பவர் தகராறு செய்து தாக்கியுள்ளார். பின்னர் முத்தையாபுரம் துறைமுகம் சாலை எம்.சண்முகபுரம் விலக்கு அருகே சுந்தரவேலை மீண்டும் வழி மறித்து தகராறு செய்த சின்னப்பராஜ், பாட்டிலை உடைத்து சுந்தரவேலின் கழுத்தை நோக்கி குத்த முயன்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கிருந்து தப்பிய சுந்தரவேல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தாமராஜ் வழக்குப்பதிவு செய்து சின்னப்பராஜை கைது செய்தார்.

இதனையடுத்து முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணரமேஷ் தலைமையிலான போலீசார் சூசைநகர் மிக்கேல் ஆண்டவர் கெபி அருகில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நடந்து சென்ற டிரைவர் சுந்தரவேலை பிடித்து சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை கண்டு அதனை பறிமுதல் செய்ய முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரவேல் போலீசாரை அவதூறாக பேசியுள்ளார். மேலும் முத்தையாபுரத்தில் தன்னை தாக்கிய சின்னப்பராஜாவை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்த போலீசார் சுந்தரவேலை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com