ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் சாவு

மீட்கபட்டவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் சாவு
Published on

பென்னாகரம்,

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் நாராயணி நகர் பகுதியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மகன் குருபிரசாத் (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் வேனில் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குருபிரசாத் மற்றும் அவரது உறவினர் செந்தில் ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குருபிரசாத் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து மாணவனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவிரி ஆற்றில் மூழ்கிய குருபிரசாத்தை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு மாணவரின் உடல் மீட்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த உறவினர்கள் மாணவரின் உடலை பார்த்து கதறித்துடித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்து (50) கட்டிட மேஸ்திரி. இவர் தனது உறவினர் இறந்த 3 மாத காரியத்திற்கு 50-க்கும் மேற்பட்டோருடன் ஒகேனக்கல்லுக்கு வந்தார். அவர்கள் முதலைப்பண்ணை எதிரே உள்ள ஏத்தமடுவு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது முத்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றபோது திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். உடன் சென்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com