கோவிலில் வெள்ளி தகடுகளை திருடியதாக 2 அர்ச்சகர்கள் கைது

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தின் மீது இருந்த வெள்ளி தகடுகளை திருடியதாக அர்ச்சகர்கள் 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவிலில் வெள்ளி தகடுகளை திருடியதாக 2 அர்ச்சகர்கள் கைது
Published on

கும்பகோணம்,

மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உற்சவர் சாமி சிலையை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம் மரத்தால் செய்யப்பட்டு அதன் மேல் வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்டு இருந்தது.

இந்த படி சட்டத்தின் மேல் இருந்த வெள்ளி தகடுகள் கடந்த 2014-ம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்டு திருட்டு போனது. இதுகுறித்து போலீசில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை.

சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசில் புகார்

இந்த நிலையில் படிச்சட்டத்தில் இருந்த வெள்ளி கவசத்தை திருடியவர்கள், பழைய படிச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக வெள்ளி கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை தயார் செய்து கோவிலில் வைக்க முயற்சி செய்வதாக சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கோவிலில் இருந்த படி சட்டத்தின் வெள்ளி கவசம் திருடு போனது உறுதி செய்யப்பட்டது.

தீட்சிதர்-பட்டர் கைது

இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், படிச் சட்டத்தில் இருந்த வெள்ளி தகடுகளை திருடிய குற்றவாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரும் இணைந்து படி சட்டத்தில் இருந்த வெள்ளி தகடுகளை திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் வெள்ளி தகடுகளை கட்டிகளாக உருக்கி மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து புதிய படி சட்டம் செய்ய ஆர்டர் கொடுத்து உள்ளதும், புதிய படி சட்டம் செய்வதற்கு நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க சொல்லி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

15 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து இருவரும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி மயிலாடுதுறையில் உள்ள சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு நேரில் சென்ற போலீசார், அங்கு புதிதாக படி சட்டம் செய்ய வைத்திருந்த 15 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com