

செங்கல்பட்டு,
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
இரட்டை கொலை
செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு (வயது 30). நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே கார்த்திக் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
உருதெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் மீது 2 கொலை வழக்கு உள்பட 13 வழக்குகள் செங்கல்பட்டு டவுன், தாலுகா, பாலூர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கார்த்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருந்தி வாழப்போவதாக போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு அதனை உறுதிசெய்யும் விதமாக 8 மாதங்களாக செங்கல்பட்டு டவுன் போலீசில் கையெழுத்து போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ் (22). காய்கறி கடைக்காரர். இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மகேஷ் தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதே கும்பல் வீட்டுக்குள் புகுந்து மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
அதிரடி கைது
அடுத்தடுத்து இரட்டை கொலை நடந்த சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசாரின் தீவிர விசாரணையில் செங்கல்பட்டு சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ரவுடிகளான மொய்தீன் (25), தினேஷ் (24), மாதவன் (22) ஆகியோர் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் பகுதியில் ஜெர்சிகா என்பவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு விரைந்த தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மொய்தீன், தினேஷ், மாதவன், ஜெர்சிகா ஆகியோரை கைது செய்து அழைத்து வந்தனர்.
சுட்டுக்கொலை
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருங்குன்பள்ளி அருகே வந்தபோது போலீஸ் வேனில் வந்த மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் தனிப்படை போலீசாரான சுரேஷ்குமார், பாஸ்கர் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் பாதுகாப்புக்கு வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க சுட்டார். இதில் எதிர்பாராதவிதமாக மொய்தீன், தினேஷ் ஆகியோரின் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார், டி.ஐ.ஜி. சத்யபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ரவுடிகளால் வெட்டுப்பட்ட தனிப்படை போலீசார் இருவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியான ரவுடிகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நலம் விசாரித்தார்
வெட்டுக்காயம் அடைந்த தனிப்படை போலீசாரை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இது குறித்து போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், செங்கல்பட்டில் நடந்த இரட்டை கொலை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேடி வந்தனர். அதன்படி அவர்கள் உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.
விசாரணைக்கு வேனில் அழைத்து வரும்போது நேற்று காலை 8 மணியளவில் இருங்குன்றம் பள்ளி அருகே போலீசாரை அரிவாளால் தாக்கியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் தப்ப முயன்றனர். இதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. 3 வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் எதிர்பாராத வகையில் போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். கொலைக்கான காரணங்கள் என்ன என்பது விசாரணையில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பெண்ணை காதல் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் 2 கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதும் தெரியவருகிறது என்றார்.
குற்ற வழக்குகள்
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய குற்றவாளிகளை கணக்கெடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும் வருகிறோம் என்றார்.
போலீஸ் துப்பாக்கி குண்டில் பலியான மொய்தீன், தினேஷ் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களுடன் கைதான ஜெர்சிகா என்ற பெண் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஜெர்சிகாவின் கணவர் குற்ற வழக்கு ஒன்றில் ஈடுபட்டு அவர் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த என்கவுண்ட்டரை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
13 மணி நேரத்தில் 2 ரவுடிகளின் கதையை முடித்த போலீசார்
* நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நாட்டு வெடிகுண்டு வீசி கார்த்திக் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப் பட்டார்.
* அடுத்த 15 நிமிடத்தில் காய்கறி கடை வியாபாரி மகேஷ் என்பவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
* நேற்று அதிகாலை கொலை குற்றவாளிகள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
* நேற்று காலை 8 மணியளவில் போலீசாரை தாக்கி ரவுடிகள் தப்பி ஓட்டம்.
* 8.05 மணியளவில் போலீசார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு.
* நேற்று காலை 8.08 மணியளவில் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு ரவுடிகளை எச்சரித்தனர்.
* மீண்டும் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகள் வீச முயன்றனர்.
* 8.10 மணியளவில் தங்களை பாதுகாத்துகொள்ள 3 ரவுண்டுகள் சுட்டதில் ரவுடிகள் மொய்தீன், தினேஷ் சாவு.
* இரட்டை கொலை வழக்கில் 2 ரவுடிகளின் கதையை 13 மணி நேரத்தில் போலீசார் முடித்துவிட்டனர்.