

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது தாம்பரம், கூடுவாஞ்சேரி, கண்ணகி நகர், பள்ளிக்கரணை, ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், கார்த்திக் புழல் சிறையில் இருந்தபோது, அம்பத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் ஓரகடம், ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் விஜயகுமாரை சந்திக்க கார்த்திக் வந்துள்ளார்.
அப்போது கோஷ்டி மோதலில் ரவுடி சூர்யா என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் கார்த்திக் மற்றும் விஜயகுமார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென குண்டு வெடித்ததில் கார்த்திக்கின் 2 கைகளும் சிதிலமடைந்து கூழாகி போயின. மேலும், கால், முகம் மற்றும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தயாரிப்பின் போது, குண்டுவெட்டிப்பினால் அருகில் இருந்த விஜயகுமார் முகத்திலும் காயம் ஏற்பட்டது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இருவரையும் மீட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.