

ஈரோடு,
மாயமான 2 சிறுவர்களை சுமார் 10 மணி நேரம் தேடி இன்று மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள நசியனூர் பள்ளியில் ஸ்ரீதர் மற்றும் லட்சுமணன் ஆகிய இரு மாணவர்களும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இருவரும் பள்ளி முடிந்து டியூசன் சென்றுள்ளனர். ஆனால், டியூசன் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவர்களை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை.
பின்னர், இது குறித்து சிறுவர்களின் பெற்றோர் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுமார் ஒரு 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மாயமான 2 சிறுவர்களையும் தஞ்சாவூரில் போலீசார் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறுவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்களுக்குப் படிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும், இதனால் வேலை தேடி அவர்கள் தஞ்சாவூருக்குச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைப்பத்தனர்.