ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள்: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அலுவலர்களும், ஆசிரியர்களும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு மாணவிக்காக ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும், அவர்கள் முறையாக கல்வி கற்பிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் டி.என்.டி.டி.ஏ. (T.N.D.T.A.) என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 5 மாணவர்கள் படித்து வந்த இந்த பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் 5-ம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவி மட்டுமே எஞ்சியுள்ளார். இந்த ஒரு மாணவிக்காக பள்ளியில் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் 2 பேருமே அந்த ஒரு மாணவிக்கு முறையாக கல்வி கற்பிப்பதில்லை என அந்த கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பள்ளியின் மையப்பகுதியில் அந்த ஒரே ஒரு மாணவி மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரி தெற்கு பகுதியிலும், மற்றொரு ஆசிரியர் ஜீவா வடக்கு பகுதியிலும் எவ்விதப் பாடமும் நடத்தாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். செய்தியாளர்களைக் கண்டதும், "உள்ளே வராதீர்கள்; எதுவாக இருந்தாலும் பள்ளி நிர்வாகத்திடம் பேசிக்கொள்ளுங்கள்" என்று தலைமை ஆசிரியர் மேரி முரண்பாடான வாதத்தை முன்வைத்தார். அதற்கு செய்தியாளர்கள், "உங்களுக்கு பள்ளி நிர்வாகமா சம்பளம் தருகிறது, அரசாங்கமா?" என்று கேள்வி எழுப்பியதும், வீடியோ பதிவிற்கு பயந்து 2 ஆசிரியர்களும் அறையை விட்டு வெளியேறி சென்றனர்.

ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள்

இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மேரிக்கு மாதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், ஆசிரியர் ஜீவாவிற்கு மாதம் ரூ.80 ஆயிரம், சமையல் உதவியாளருக்கு ரூ.7 ஆயிரம் அரசு பொதுப் பணத்திலிருந்து ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மின்சார சேவை, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், சமையல் எரிவாயு மற்றும் எல்.இ.டி. தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

இத்தனை வசதிகள் இருந்தும், ஆசிரியர்கள் கடமைக்காக வந்து செல்லும் போக்கையே கடைப்பிடிப்பதாகவும், வகுப்பறை கரும்பலகையில் உள்ள தேதியைக் கூட மாற்றுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அரசு உதவி பெறும் இது போன்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அலுவலர்களும், ஆசிரியர்களும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com