

தூத்துக்குடி,
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தியது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 2 பைபர் படகுகள், பீடி இலை மூட்டைகளுடன் இலங்கை புத்தளம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் படகுகளிலிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகில் பீடி இலை மூட்டைகளை கடத்தியதாக தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த ஆனந்த் (வயது 45), திரேஸ்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த்(40), ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் மங்களா பகுதியைச் சேர்ந்த சுகிர்தன்(44) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியைச் சேர்ந்த தினேஷ்(36) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மெல்பர் என்பவருக்குச் சொந்தமான பீடி இலை மூட்டைகளுடன் பிடிபட்ட ரோஹித் என்பவரின் படகில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த மிக்கேல்(30), தூத்துக்குடி பூபாலராயபுரத்தைச் சேர்ந்த ஞானி(27) மற்றும் சஞ்சய்(23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மேற்சொன்ன 7 பேரிடமும் இலங்கை கடற்படையினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.