

திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்பவரிடம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி(43) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜினி(28) ஆகிய 2 பேரும் சேர்ந்து, சரோஜினி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், அவர் அநேக நபர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறி, அதேபோல் திருநெல்வேலி சுகாதாரத்துறை ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூ.8 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டும், போலி பணி நியமன ஆணை வழங்கியும் மோசடியில் ஈடுபட்டடுள்ளனர்.
இதனையடுத்து மேற்சொன்ன 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அஜித்குமார் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில் டி.எஸ்.பி. (மாவட்ட குற்றப்பிரிவு-I) விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் சரோஜினி, ராஜலெட்சுமி ஆகிய 2 பேரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்ட விவரம் உண்மை என தெரியவந்ததின்பேரில், 28.1.2026 அன்று மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் சரோஜினி, ராஜலட்சுமி ஆகிய 2 பேரையும் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ஏட்டு முத்துராமலிங்கம் ஆகியோர் சேர்ந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சுகாதாரத்துறை ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றவாளிகளை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.