

ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளி. இவர் பட்டணம் முனியப்பம்பாளையம் இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று தொழிலாளி முருகேசன் (வயது45) என்பவர் 8 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் உள்ள மரப்பலகை மற்றும் முட்டுக்களை அகற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினார். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்களான சஞ்சய் (22), தவமுருகன் (35), ஆறுமுகம் (32), சிரஞ்சீவி (19) ஆகிய 4 பேர் ஒவ்வொருவராக தொட்டிக்குள் இறங்கினர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதில் அடுத்தடுத்து அனைவரும் மயங்கினர். இதுபற்றி அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தொழிலாளிகள் 5 பேரும் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு முருகேசன், சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.