

கடலூர்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதியின் மகன் விதுன் (வயது 2). இந்த நிலையில் நேற்று மதியம் சரிதா, தனது மகன் விதுனுக்கு வீட்டிற்கு வெளியே வைத்து சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது விதுன் நடந்து அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் குழந்தை விதுன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரிதா, விதுனின் உடலை பார்த்து கதறி அழுதார். குழந்தையை பறிகொடுத்த தாயின் அழுகுரல் காண்போரின் கண்களை கலங்க வைத்தது.