குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
Published on

களியக்காவிளை,

குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட செறுவல்லூர் தேவிகோடு பனச்சக்காலை பகுதியை சேர்ந்தவர் அனில் (வயது 38), மாங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி அருணா. இந்த தம்பதிக்கு அனிருத் (5), ஆரோன் (2) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனில் ஒரு தோட்டத்தில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்த போது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. அன்று முதல் அவர் எழுந்து நடக்க முடியாமல் உள்ளார். அவரை மனைவி அருணா உடனிருந்து கவனித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அனிலுடன், அருணா பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆரோன் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அப்போது சமையல் அறைக்குள் சென்ற ஆரோன், நாற்காலியில் ஏறியபடி அங்கிருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்துள்ளான். பின்னர் குளிர்பானம் என நினைத்து அதனை திடீரென குடித்து விட்டான். இதனை குடித்த சிறிது நேரத்தில் குழந்தை அலறி துடித்தது. மேலும் பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யும் சிந்தியது.

சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அருணா, குழந்தையிடம் இருந்து மண்எண்ணெய் வாசம் வருகிறதே? என சந்தேகம் அடைந்தார். அப்போது குழந்தையும் திடீரென வாந்தி எடுத்தது. இதனால் அவர் பதறி போனார். எனவே குழந்தை மண்எண்ணெய் தான் குடித்து விட்டது என உறுதி செய்த அருணா, உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆரோன் பரிதாபமாக இறந்தான். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com