

தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பாலக்கோடு அடுத்த சாமியார் நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார்–காவ்யா தம்பதியரின் 2 வயது மகள் வினோதினி, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து பெல்ரம்பட்டி செல்ல வேண்டிய 19-ஆம் எண் டவுன் பேருந்து பழுதானதால், அதற்கு மாற்றாக 4-ஆம் எண் பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்து சாமியார் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது பின்சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.