

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 28 வயது தொழிலாளியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½வய தில் பெண் குழந்தை இருந்தது.
குடும்பத் தகராறு காரணமாக அந்த இளம் பெண் கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாககூறி அதன் தாய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்து அறிந்த தந்தை தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கும், ஜேசுராஜபுரத்தை அடுத்த கோம்மைகாடு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவ ருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவர் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். இளம்பெண் இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததும், இதில் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பெரியநாயகத்தை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர். அவர் மீது இறப்பை ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.