

சென்னை,
நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.
தமிழக நிதி நிலைமை குறித்து சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது:-
மாநிலத்தின் நிதிநிலை, நிலையில்லாமல் உள்ளது. கடன் சுமையால் நிரம்பியும், குறைந்தபட்ச வருவாயுடனும், கசியும் ஓட்டைகளுடனும் கூடிய கருவூலப் பெட்டி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டுவிட்டது. எனினும், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதி ஒருங்கிணைப்பு பாதைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும்.
முதல்-அமைச்சர் தலைமையின் கீழ், அரசியல் களத்தில் நமது முந்தைய அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இந்த முயற்சியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான நிதி ஒருங்கிணைப்புடன் கூடிய நல்லாட்சியைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்து விளங்கும்.
தமது 5 ஆண்டு பதவிக்காலத்தை மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையுடன், குறுகியகால அரசியல் ஆதாயங்களில் மட்டுமே கவனம் செலுத்திய முந்தைய அரசைப் போலன்றி, நிலையான கொள்கைகள் மற்றும் தூய்மையான, திறமையான நல்லாட்சியை வழங்குவதன் மூலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அரசு நம்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.