

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று சாகுபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.
போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, அவர்களது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. சுமார் 125 கிராம் எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (வயது 23) மற்றும் காயல்பட்டினம் ரத்தினாபுரி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் ராஜீவ்பிரபு(23) என்பது தெரியவந்தது.
இவர்கள் அந்தப் பகுதியில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்குக் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.