

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த செல்லப்பா மகன் பிரமுத்து (வயது 22), ஆலங்குளம் வட்டம், நெட்டூர் பகுதியை சேரந்த அர்ச்சுனன் மகன் இசக்கிமுத்து(19) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்சொன்ன 2 வாலிபர்களும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவர் மேற்சொன்ன வாலிபர்கள் 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.