

திருவண்ணாமலை,
கிணறு தோண்டிய போது மண் சரிந்து விழுந்ததில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி அருகே போளூர் கிராமத்தில் செல்வமணி, ரவிச்சந்திரன் இருவர் உட்பட 3 இளைஞர்கள் இன்ற கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திடீரென சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. நேற்று பெய்த கனமழையால் ஈரப்பதத்துடன் இருந்த மண் குவியல் திடீரென சரிந்ததால், பணியில் இருந்த 3 பேரும் மண்ணில் சிக்கிக்கொண்டனர். இதில் செல்வமணி, ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.