

ஆரணி
ஆரணி சரக போலீஸ் நிலை.ப்பகுதிகளில் 6 நாட்களாக நடைபெற்ற ரோந்து பணியின்போது தலைமறைவாக இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
ரோந்து பணி
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி டவுன், தாலுகா, களம்பூர், கண்ணமங்கலம், சந்தவாசல், ஆரணி அனைத்து மகளிர் ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி முதல் இன்று வரை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் கோகுல் ராஜன், புகழ், மகாலட்சுமி, அல்லிராணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபுதீன், முத்துலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறியதாவது:-
20 பேர் கைது
ரோந்து பணியின்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியது என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஆர்.எஸ். கருவி மூலமாக 770 நபர்களை புகைப்படம் எடுத்து அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரோந்து பணியில் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் 17 பேரும் பிடிபட்டனர்.
அவர்களை ஆரணி உதவி கலெக்டர் முன்பு ஆஜர் படுத்தி நன்னடத்தைச் சான்றுகள் பெறப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
சந்தேகத்தின் பேரில் 55 பேரை பிடித்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.