தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரேநாளில் 20 செல்போன்கள் திருட்டு

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒரேநாளில் 20 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரேநாளில் 20 செல்போன்கள் திருட்டு
Published on

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒரேநாளில் 20 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

தேனி அரசு மருத்துவமனை

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளிகளை கவனித்து கொள்ள வரும் உறவினர்கள், இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு அருகே இருக்க அனுமதி இல்லை. இதனால் அவர்கள் மருத்துவமனை வார்டுகளுக்கு வெளிப்புற பகுதியிலும், மருத்துவமனை வளாக சாலையோர திண்டுகளிலும் படுத்து தூங்கி வருகின்றனர்.

செல்போன்கள் திருட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை சிகிச்சை வார்டுகளுக்கு வெளிப்புற பகுதியிலும், மருத்துவமனை வளாகத்தின் மற்ற பகுதிகளிலும் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிலரின் செல்போன்கள் திருடுபோனது.

அந்த வகையில் ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்ட செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். சிறிது நேரத்தில் கண்விழித்த பொதுமக்கள், தங்களது செல்போன்களை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் சம்பவங்கள்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மருத்துவமனை வார்டுகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் படுத்து தூங்கும் பொதுமக்களின் செல்போன்கள் மாயமாவது வாடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் அரசு டாக்டர் ஒருவரின் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவை திருடுபோனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, லேப்டாப், செல்போன் திருடிய வாலிபரை கைது செய்தனர். ஆனால் ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடுபோனது இதுவே முதல்முறை என்று மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.

செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் கூறுகையில், "தேனி அரசு மருத்துவமனை வார்டுகளில் அடிக்கடி இரவு நேரங்களில் இதுபோன்ற செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அது செயல்படுவதில்லை. இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும் செல்போன்கள் திருட்டு குறித்து புகார் அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேனி அரசு மருத்துவமனையில் அரங்கேறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com