எழும்பூர் ரெயில் நிலையத்தில் 20 கிலோ வெள்ளி பறிமுதல் - சேலத்தை சேர்ந்தவர் கைது

வெள்ளி மற்றும் பணத்தை ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் 20 கிலோ வெள்ளி பறிமுதல் - சேலத்தை சேர்ந்தவர் கைது
Published on

சென்னை,

சென்னையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், நடைமேடை 7-ல் நேற்று முன்தினம் இரவு வந்து நின்றது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், ரூ.61.50 லட்சம் மதிப்பிலான 20.43 கிலோ எடை கொண்ட வெள்ளி கட்டிகளும், ரூ.2.5 லட்சம் ரொக்க பணமும் இருந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும்.

இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வெள்ளி மற்றும் பணத்தை கொண்டு வந்த அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சேலத்தை சோ்ந்த சஞ்சய் அருண்குமார் (வயது 40) என்பதும், வெள்ளி மற்றும் பணத்தை ஒடிசா மாநிலம் பாலேஸ்வரியில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளி மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட சஞ்சய் அருண்குமாரை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com