20 ஸ்மார்ட் வகுப்பறைகள்... நவீன வசதிகளுடன் பள்ளிக் கட்டடங்கள் - அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்!

திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
20 ஸ்மார்ட் வகுப்பறைகள்... நவீன வசதிகளுடன் பள்ளிக் கட்டடங்கள் - அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்!
Published on: 

சென்னை,

நவீன வசதிகளுடன் கூடிய பள்ளிக் கட்டடங்களை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று (10.11.2026) பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், அண்ணாநகர் மண்டலத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 2 புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் என மொத்தம் ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

கூடுதல் பள்ளிக் கட்டடம்

அமைச்சர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-99க்குட்பட்ட கங்காதீஸ்வரர் கோயில் சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பள்ளி வளாகத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, இந்தப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

இந்த பள்ளியில் பிளாக்-B கட்டடமானது தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 6 வகுப்பறைகள், 2 ஆசிரியர் அறைகளுடனும், பிளாக்-Aயில் 10 வகுப்பறைகள், பல்நோக்கு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கட்டடத்திலும் 20 ஸ்மார்ட் வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறை வசதிகள், நுழைவாயில், பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக்குகள், முழு வளாகத்தையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78க்குட்பட்ட தானா தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சென்னை நடுநிலைப்பள்ளிக் கட்டடத்தை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, அங்கு பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடி இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, இப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்

இந்தக் கட்டடமானது 1,598 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் 18 வகுப்பறைகள், 2 ஆசிரியர் அறைகள், கணினி ஆய்வகம், சமையலறை, கலையரங்கம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர், வி.வி. கோயில் தெருவில் நகர்ப்புற சுகாதார தேசிய திட்டம் (NUHM) மற்றும் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்தக் கட்டடம் 1985 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதில், அவசர அறை, மருந்தகம், ஆய்வகம், ஊசி போடும் அறை, ஆவண அறை, மருந்து இருப்பு அறை, மருத்துவ ஆலோசனை அறை, பதிவு அறை, மருத்துவ அலுவலர் அறை, பணியாளர்கள் அறை, காத்திருப்புக் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்சுருதி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், கல்வி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X