

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கும் பொருட்டு, ரூ.200 கோடியை விடுவித்து முதல்-அமைச்சர் ஆணையிட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 21 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில், ரூ.2,949 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில், புதிய பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல அம்ரூத் திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருநெல்வேலி, கோவை, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகள் மற்றும் கும்பகோணம், ராமேஸ்வரம், ராஜபாளையம், ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளில், ரூ.2,994 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன.
சென்னையில் பெருங்குடி உள்ளிட்ட 15 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ரூ.1,028 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில், விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட 14 பகுதிகளுக்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க, ரூ.4,034 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது.
கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து, அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்குமான திட்டத்தை, அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில், ரூ.3,539 கோடி மூலதன மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு, முதல்-அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் 11 நகரங்களில், கடந்த 2015-2016-ம் ஆண்டு முதல் ரூ.11,296 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில், 327 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், இத்திட்டத்திற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில், 2016-2017 மற்றும் 2017-2018-ம் ஆண்டில், ரூ.840 கோடி மதிப்பீட்டில், 40 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2018-2019-ம் ஆண்டில், ரூ.420 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்பட உள்ளன.
அ.தி.மு.க. அரசு 2018-19-ம் ஆண்டில், ரூ.252 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து, 1 லட்சம் மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது.
இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,12,972 மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, மானியமாக, ரூ.256 கோடியே 59 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.