கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது

சென்னை கிண்டியில் தடுப்புகளை உடைத்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது
Published on

சென்னை கிண்டி சின்னமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கையெழுத்து போடாமல் கிடப்பில் வைத்து இருக்கும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து கவர்னர் மாளிகயை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

ஆனால் இந்த போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் நாகேந்திரன் நாயர், அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சாலையில் 2 இடங்களில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் தடுப்புகளை அமைத்ததால் போராட்டம் நடத்த கூடியிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். திடீரென அவர்கள், போலீசார் அமைத்த தடுப்புகளை தள்ளிவிட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.

இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதல் தடுப்பை உடைத்து விட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்ற போது 2-வது தடுப்புகள் மூலம் அவர்களை போலீசார் தடுத்தனர். அந்த தடுப்புகளையும் உடைத்து விட்டு சின்னமலை அண்ணா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போராட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் தடை செய்யப்பட்டு இருந்த போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com