சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்! மேலும் 450 டன் அகற்ற இலக்கு

பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சி
Published on: 

சென்னை,

சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 450 டன் அகற்ற சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், தீபாவளி பண்டிகையின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பொதுமக்கள் தனியாகப் பிரித்து, அதற்கென வழங்கப்பட்டுள்ள தனிப்பைகளில் சேகரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், பொதுமக்களிடையே இதற்கான ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

பட்டாசு கழிவுகள் அகற்றம்

இதுவரை சென்னை மாநகரம் முழுவதும் இதுவரை சுமார் 200 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வரும் நாட்களில் சுமார் 450 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், மழையின் காரணமாக பட்டாசு கழிவுகள் சாலைகளில் ஒட்டிக்கொண்டு இருப்பதால், அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சாலைகளில் தேங்கியுள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட்டாசு கழிவுகளை விரைந்து அகற்றும் பணிக்காக, கூடுதலாக 600 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காகத் துப்புரவுப் பணியாளர்களுக்கு 30,000 எண்ணிக்கையிலான 50 கிலோ கொள்ளவு கொண்ட சேகரிப்புப் பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டி செயலாக்க மையம்

இவ்வாறு சேகரிக்கப்படும் பட்டாசு கழிவுகள், அறிவியல் பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் சுத்திகரித்து அகற்றுவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் பட்டாசு கழிவுகளைத் தனியாகப் பிரித்து, தங்களது பகுதிகளுக்கு வரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைத்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பட்டாசு கழிவுகளை வழக்கமான வீட்டு குப்பைகளுடன் கலக்காமலும், சாலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டாமலும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சென்னையை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X