பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் தக்களிகள் கண்டெடுப்பு

தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தக்களிகளை பழங்கால மக்கள் நெசவு தொழிலுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்காவனூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர் டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்க கால மக்கள் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண் தக்களிகளைகண்டெடுத்தனர். இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் இமானுவேல் கூறுகையில், தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தக்களிகளை பழங்கால மக்கள் நெசவு தொழிலுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக சுடு மண்ணால் கூம்பு வடிவில் செய்யப்பட்ட இந்த தக்களிகளை கொண்டு, அதன் முனையில் பருத்திகளை நுழைத்து நூலாக உருவாக்கி ஆடைகள் நெய்ய பயன்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம் நமது முன்னோர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என அறியமுடிகிறது. அதுமட்டுமின்றி தென்பெண்ணையாறு கரையோரம் உள்ள மேல்காவனூர், தளவானூர் ஆகிய பகுதிகளில் இன்றளவும் ஒருசிலர் பருத்தி பயிரிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கரையோரம் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்களை தொடர்ந்து கண்டறிந்து ஆவணப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.






