அழகன்குளத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தடயங்கள் கண்டுபிடிப்பு!

பல்வேறு காலத்தை சேர்ந்த நாணயங்களும், தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
அழகன்குளத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தடயங்கள் கண்டுபிடிப்பு!
Published on: 

அழகன்குளம்,

அழகன்குளத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் அகழாய்வு பணி மேற்கொண்டனர். இதில் ஏராளமான பழங்கால நாணயங்கள், தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வு பணி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் கோட்டைமேடு அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1986-87-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சிவப்பு பானை ஓடுகள், ரோமன் நாட்டு மதுக்குடுவைகள், ரோமானிய காசு, எலும்பினால் செய்யப்பட்ட சீப்பு, மோதிரம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை ஆய்வு செய்த போது அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என்பது தெரியவந்தது. அதன் பின்பு 1990-91, 1993-94, 1995-96, 1997-ம் ஆண்டு என பல்வேறு காலக்கட்டங்களில் இங்கு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அருங்காட்சியகம்

பின்னர் 2016-17-ம் ஆண்டு அழகன்குளத்தில் 8-வது முறையாக அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அழகன்குளத்தில் கிடைத்த தொல்பொருட்கள் முறையாக காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தவில்லை என்றும் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைத்து அவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என அப்போதைய தமிழக அரசிடம் அழகன்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் அசோகன் கோரிக்கை வைத்திருந்தார். த.வெ.க அரசு பொறுப்பேற்றதும் திருவா டானை எம்.எல்.ஏ. அமைச்சர் டாக்டர் ராஜீவிடமும் இதுகுறித்து கோரிக்கை வைத்தார்.

கண்டுபிடிப்பு

இந்த நிலையில் சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் பேராசிரியர் மாயகிருஷ்ணன் என்பவரின் வழிகாட்டுதலில் அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அழகன்குளத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். 3 மணி நேரத்தில் பல்வேறு வகையான தொல்பொருட்களும் பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த நாணயங்களும் கிடைத்தன. அதில் குறிப்பாக மேற்கு ரோமானிய பேரரசை சேர்ந்த இரண்டாம் வேலண்டைன் மன்னரின் நாணயம், தேவ நாகரி எழுத்துக்களை கொண்ட பிற்கால பேரரசான முதலாம் ராஜராஜ சோழனின் நாணயம், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த இரட்டைக் கயல் மீன்கள் செங்கோல் குறியீடு கொண்ட நாணயங்கள், ஜலால் உத்தின் அச்சன் ஷா வம்சத்தைச் சேர்ந்த மதுரை சுல்தான்களால் ஹிஜ்ரி ஆண்டு 735 என்று குறிப்பிடப்பட்ட செம்பு நாணயங்கள், கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்திய செப்பு நாணயம் மற்றும் உலோக உருக்குப் பொருட்கள் உள்பட பல்வேறு காலத்தை சேர்ந்த நாணயங்களும், தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் அழகன்குளம் வணிக ரீதியாக உலக நாடுகளுடன் மேற்கொண்டு வந்த வாணிபத்தை பறைசாற்றுவதாகவும் தெரிவித்தனர். அழகன்குளத்தில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

X